திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சர்க்கரை நோய் 7 அறிகுறிகள்


98 சதவிகித இந்தியர்களுக்கு, அவர்களின் தவறான வாழ்க்கைமுறையின் காரணமாகத்தான் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளது என்கிறது, ‘இந்திய சர்க்கரை நோய் மருத்துவர்கள் கூட்டமைப்பு’. சர்க்கரை நோய் பற்றிய பயம் இருந்தாலும், போதிய விழிப்புஉணர்வு இல்லாததால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். டைப் 2 சர்க்கரை நோய் 30 வயதுக்கு மேல்தான் வரும். அந்த நேரத்தில், உடல் எடையைக் குறைத்தல், கட்டுக்குள் வைத்திருத்தல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு என்று கவனமாக இருந்தால், நிச்சயம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். மேலும், சில அறிகுறிகளைத் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் ஆரம்பகட்டத்திலேயே அதாவது, ப்ரீடயாபடீஸ் நிலையிலேயே கண்டறிந்து, சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
அதிக தாகம்
சர்க்கரை நோயின் முக்கியமான அறிகுறி, தாகம். வழக்கத்துக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். டாக்டர்கள் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்கிறார்கள். நாமும் இப்போது நிறைய தண்ணீர் குடிக்கிறோமே என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. திடீரென்று நம்மையும் அறியாமல் அதிக தாகம் எடுத்து, நிறைய தண்ணீர் குடிக்கிறோம் என்றால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, அதை வெளியேற்ற நம்முடைய சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்கின்றன. இதனால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடுகிறது. இதை ஈடு செய்வதற்காக, தாகம் அதிகரிக்கிறது.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையை வெளியேற்ற, சிறுநீரகம் முயற்சிக்கும்போது, உடலில் உள்ள நீரின் அளவு குறைகிறது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவு சிறுநீர் கழிக்கச் சென்றால், தூக்கத்தின் நடுவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
உடல் எடை குறைதல்
சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்றால், இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை அல்லது அதன் செயல்திறன் போதுமான
தாக இல்லை என்று அர்த்தம். செல்களுக்கு குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், சர்க்கரை ரத்தத்திலேயே இருப்பதால், எந்தக் காரணமும் இன்றி உடல் எடை தானாகக் குறைய ஆரம்பிக்கிறது.
அதிகப் பசி
டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்திறன் குறைந்துவிடுகிறது. இதன் மூலம் செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கணையமானது இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகிறது. இன்சுலின் அளவு அதிகமாக இருக்கிறது. இது, மூளைக்கு இன்னும் குளுக்கோஸ் தேவை உள்ளதாக சிக்னல் செய்கிறது. இதனால், பசி எடுக்கிறது.
வாய் உலர்தல்
சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சில் சுரப்பு குறைவதால் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படும். சில மருந்துகள் எடுப்பதன் காரணமாகவும் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படலாம். வாய் உலர்தல் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
அதிகப்படியான சோர்வு
நம் உடலில் உள்ள செல்கள்தான் குளுக்கோஸைப் பயன்படுத்தி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. செல்களுக்கு போதுமான அளவு குளுக்கோஸ் கிடைக்கவில்லை, நீர்ச்சத்தும் வெளியேறிக்கொண்டே இருக்கிறது எனில், உடலில் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படும். உடலில் நீர்ச்சத்து குறைவதால், தலைவலியும் ஏற்படுகிறது.
பார்வை மங்குதல்
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கண்ணில் ரெட்டினா பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், பார்வை மங்கலாகும். இவர்கள், சர்க்கரை நோய் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவதன்மூலம், ஆரம்பநிலையிலேயே இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். காலில் மதமதப்பு அல்லது காலில் ஊசி குத்துவது போன்று சுறுக்சுறுக்கென வலி, காயங்கள் நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்த பெண்களுக்கு பிறப்பு உறுப்பில் நமைச்சல், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டால் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்!


நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும், முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும், 83 சதவீத தண்ணீரால் ரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய தண்ணீரை, வெறும் வயிற்றில் குடிப்பதன் வாயிலாக, பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
குடல் சுத்தமாகும்: அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது, குடல் சுத்தம். தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலே, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் முற்றிலும் வெளியேறிவிடும்.
பசியை தூண்டும்: தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில், தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
ரத்த செல்கள் உற்பத்தி: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால்
ரத்தத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், உடல் எனர்ஜியுடன் இருக்கும்.
தலைவலியை தடுக்கும்: பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து, குறைவாக இருப்பதால் அடிக்கடி தலைவலி ஏற்படும். இவர்கள் தினமும் அதிகாலையில், வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலி குறையும்.
அல்சரை தடுக்கும்: காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடை குறைப்பு: எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமம்: குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால், சருமம் அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ரத்தம் சுத்திகரிக்கும் மல்லித்தழை!


கொத்தமல்லி என்றதும் தனியா நம் நினைவுக்கு வரும். தனியாவுக்கென்று நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளதுபோலவே கொத்தமல்லித்தழைக்கும் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன. அன்றாட சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்த மல்லித்தழையை தனியாக துவையல், சட்னி போன்ற வடிவங்களில் செய்து சாப்பிட்டால் நிறைய பலன்கள் உண்டு. சிறுவயது முதல் கொத்தமல்லித்தழையை துவையல் போன்ற வடிவங்களில் சாப்பிட்டு வருவதால் பார்வைக்குறைபாடுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியும். வாயில் புண் ஏற்பட்டால், கொத்தமல்லித்தழையுடன் தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால்… புண் சரியாகும். இதேபோல் வயிற்றுப்புண், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு ரத்தத்தை சுத்திகரிப்பதில் கொத்தமல்லித்தழை முக்கிய பங்காற்றுகிறது.

நெய்யில் கொத்தமல்லித்தழையை வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால், அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் ‘டானிக்’குக்கு இணையான பலனைத் தரும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாதத்துடனோ அல்லது வேறு வடிவங்களிலோ கொத்தமல்லித்தழையை சேர்த்துக்கொள்வதால், நாளடைவில் பார்வை சரியாகும். மலச்சிக்கல், உடம்பு வலி உள்ள வர்கள் கொத்தமல்லித்தழையுடன் வெற்றிலை சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் பிரச்னை சரியாகும்.

முகப்பொலிவிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் … அரிசி கழுவிய தண்ணீர்


அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய
நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை (Elasticity ) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.  
அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்ட வேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந் தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கு வதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.  அரிசி கழுவியநீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சருமசெல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கிய மாகவும் பொலிவோடும் இருக்கும். 

அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மை யின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிதுநேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.  இதனால் கூந்தலின் மென்மைத் தன்மை அதி கரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போ ஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தொப்பை குறைய வேண்டுமா


உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள்.
சரிவிகித நீர்ச்சத்து: அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.
தொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி: தொப்பை இருக்கிறது என்பதற்காக, உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்தானது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனவே சரியான நேரத்திற்கு, சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக அளவில் எப்பொழுது பார்த்தாலும் அரைத்துக்கொண்டு இருப்பதும் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உற்சாகமான நடை: தொப்பை வயிறு குறைய, தினசரி அரைமணி நேரமாவது உற்சாகமாக நடக்க வேண்டும் என்பது, உணவியல் நிபுணர்களின் அறிவுரை. இது இதயத்திற்கும் இதமான ஒரு உடற்பயிற்சி. நடைபயிற்சியானது தொப்பையை கரைப்பதோடு அன்றைய நாளை உற்சாகத்துடன் நடத்திச் செல்லும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோல் நீச்சலானது உடலை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இது உற்சாகமான உடற்பயிற்சியும் கூட. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
பழங்கள், காய்கறிகள்: நமது அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளதால் உடலின் ஜீரணமண்டல இயக்கத்தை சரியாக நடைபெறச் செய்கின்றன.
செயற்கை குளிர்பானங்கள்: வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது.
எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.